NATIONAL

15வது பொதுத் தேர்தல்- சிலாங்கூரில் 50 விழுக்காட்டு மலாய் வாக்காளர்கள் ஆதரவை ஹராப்பான் பெற்றது- அன்வார்

ஷா ஆலம், பிப் 7- அண்மையில் நடைபெற்று முடிந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர் மாநிலத்தில் 50 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களின் ஆதரவை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி பெற்றது.

தொடக்கக்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை பெறப்பட்டதாக ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மேலும், மலாய் சமூகத்தின் ஆதரவை அக்கூட்டணி பெறவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 31 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களின் ஆதரவை ஹராப்பான் கூட்டணி பெற்ற வேளையில் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் இந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது என்று அவர் சொன்னார்.

சில இடங்களில் குறிப்பாகக் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் குறைவான ஆதரவு கிடைத்தது உண்மைதான். ஆயினும் ஹராப்பான் கூட்டணிக்கு 19 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது என்ற சில தரப்பினரின் கூற்றில் உண்மை இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அந்த தரப்பினரின் கூற்று உண்மையாக இருந்தால் கடந்த 15வது பொதுத் தேர்தலில் நாம் இவ்வளவு தொகுதிகளை வென்றிருக்க வாய்ப்பு இல்லை என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இதர கட்சிகளின் ஆதரவையும் ஒன்று சேர்த்தால் கடந்த பொதுத் தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 2/3 பெரும்பான்மையை நடப்பு அரசாங்கம் பெற்று விட்டது என்றார் அவர்.


Pengarang :