NATIONAL

அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கு ஒற்றுமை அரசு உத்தரவாதமளித்துள்ளது- மாமன்னர் உரை

கோலாம்பூர், பிப் 13- நாடு பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் மக்களின் சுபிட்சம் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் காணப்படும் கருத்திணக்கமே காரணமாக விளங்குகிறது.

வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனது நோக்கத்திற்கேற்ப இந்த அரசாங்கம் அமைந்துத்துள்ளதாக மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா தெரிவித்தார்.

நாட்டின் 10வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் அமைச்சரவைக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட மாமன்னர், கடந்த 15வது பொதுத் தேர்தல் முடிவுகளை அனைத்து தரப்பினரும் திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நீடித்த வளர்ச்சி, சுபிட்சம், ஆக்கத் திறன், ஒருவரை ஒரு மதிக்கும் பண்பு, நம்பிக்கை, பரிவு, கருணை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய நாகரீக மலேசியா கோட்டை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை நாடாளுமன்றத்தில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நிலையற்ற உலகப் பொருளாதாரம், கோவிட்-19க்கு பிந்தைய சூழல், வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்குக் காரணமான பணவீக்கம் ஆகிய சவால்களை எதிர் கொள்வதற்கு ஏதுவாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் வீண் விரயங்களைத் தடுப்பது, இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினருக்கு உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட
நடவடிக்கைகளையும மாமன்னர் பாராட்டினார்.

ஊழலை ஒழிப்பதற்கு அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டையும், அந்நோக்கத்தை அடைவதற்காக அது மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளையும் தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :