தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிடில் டிங்கி எண்ணிக்கை அடுத்தாண்டு அதிகரிக்கும்- சித்தி மரியா எச்சரிக்கை

ஷா ஆலம், பிப் 17- தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்படாவிட்டால் சிலாங்கூரில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை அடுத்தாண்டு அதிகரிக்கும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் எச்சரித்துள்ளார்.

நாட்டில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட டிங்கி பரவல் சுழற்சி தொடர்பான ஆய்வுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும். ஆகக்கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டில் நாட்டில் 72,543 டிங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. டிங்கி பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைளை கடப்படுத்தாவிட்டால் வரும் 2024ஆம் ஆண்டில் அத்தகைய எண்ணிக்கை உயர்வு நாம் எதிர்நோக்க வேண்டி வரும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வரை மாநிலத்தில் 6,870 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டின் இதே காலக் கட்டத்தைவிட இது 141.4 விழுக்காடு அதிகாகும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் டிங்கி காய்ச்சல் தொடர்புடைய மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை அபரிதமாக அதிகரித்து 56ஆகப் பதிவானது. கடந்த 2020இல் இந்த எண்ணிக்கை 37ஆக இருந்த வேளையில் கடந்த 2021இல் இருவரும் 2022இல் 14 பேரும் இந்நோய்க்கு பலியாகினர் என்றார் அவர்.

டிங்கி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நாட்டிலுள்ள பத்து மாவட்டங்களில் ஐந்து சிலாங்கூரில் உள்ளதாக கூறிய அவர், பெட்டாலிங், உலு லங்காட், கோம்பாக், கிள்ளான் மற்றும் உலு சிலாங்கூர் ஆகியவையே அந்த ஐந்து மாவட்டங்களாகும் என்றார்.

 


Pengarang :