SELANGOR

கோம்பாக், கோல சிலாங்கூரில் இலவச மருத்துவப் பரிசோதனை- வார இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், பிப் 22- எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் நடைபெறும் இலவச மருத்துவப் பரிசோதனை நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் தொற்றா நோய்கள், புற்றுநோய், கண் பரிசோதனைகளோடு கூடுதலாகப் பல், காது மற்றும் பிஸியோரதெராப்பி சிகிச்சையும் வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

கோம்பாக் மாவட்ட நிலையிலான இப்பரிசோதனை நிகழ்வு தாமான் மெலாவத்தி பாசார் ரமலான் வளாகத்திலும் கோல சிலாங்கூரில் இக்கோவேர்ல்ட், டத்தாரான் எஸ்பிலேனேட்டிலும் நடைபெறும் என்று அவர் சொன்னார்.

வார இறுதியில் நடைபெறும் இலவச மருத்துவப் பரிசோதனை நிகழ்வில் கலந்து கொள்ளும்படி பொது மக்களை அழைக்கிறோம். மானியக் கட்டணத்தில் சிகிச்சைப் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் பெறலாம் என்றார் அவர்.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் இவ்வாண்டில் மறுபடியும் தொடங்கப்படுவதன் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மொத்த 26 லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த சிலாங்கூர் பொன்யாயாங் திட்டத்தின் வாயிலாக 56 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 31,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :