SELANGOR

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 24 டிங்கி கிட்கள் வழங்கப்பட்டன – செலாயாங் நகராட்சி கழகம்

ஷா ஆலம், பிப் 22: செலாயாங் நகராட்சி கழகம் (எம்பிஎஸ்) ஏடிஸ் இனப்பெருக்கத்தை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 24 டிங்கி கிட்களை வழங்கியுள்ளது.

தற்போது டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து இந்த கிட் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் நிறுவனத் துறையின் மக்கள் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

“ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கத்தைச் சமூகம் தீவிரமாகக் கையாளவில்லை என்றால், அடுத்த ஆண்டு சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலின் எண்ணிக்கை 150 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 “அதிகரித்து வரும் டிங்கி சம்பவங்களைத் தடுக்கவும், நிர்வகிக்கவும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறையின் கட்டுப் பாட்டுப் பிரிவினர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டிங்கி கிட்களை வழங்கியுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்பு மக்கள் தங்கள் வீடுகளை வாரத்திற்கு ஒரு முறை 10 நிமிடங்களுக்குச் சுத்தம் செய்ய அறிவுறுத்துகிறது. ஏடிஸ் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தேடி அகற்றுவதுடன், திறந்த வெளியில் தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது.

டிங்கி காய்ச்சலின் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாகச் சிகிச்சை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எம்.பி.எசின்  இந்த நடவடிக்கையை டிங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் சமூகப் பகுதிகளையும் தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை  மேம்படுத்துவதை  நோக்கமாக  கொண்டு  ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :