SELANGOR

பி40 தரப்பினருக்கு உதவ மேலும் 10 இடங்களில் மலிவு விற்பனை- குவாங் தொகுதி திட்டம்

கோம்பாக், பிப் 22- எதிர்வரும் மே மாதம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மேலும் பத்து இடங்களில் மலிவு விற்பனையை நடத்த குவாங் சட்டமன்றத் தொகுதி திட்டமிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரைப் பெரும்பான்மையினரைக் கொண்ட இத்தொகுதி மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சலாசியா டிசா கூறினார்.

பண்டார் தாசேக் புத்ரியில் மட்டும் பத்து மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போரின் எண்ணிக்கை 20,000க்கும் அதிகமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

தற்போது பொருள் விலை உயர்வு கண்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த மலிவு விற்பனையை ஏற்பாடு செய்துள்ளோம். குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் தரமான பொருள்களை மலிவான விலையில் வாங்குவதை உறுதி செய்ய குவாங் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 10 மலிவு விற்பனைகளை நடத்தியுள்ளோம் என அவர்
குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள அஸலியா கோர்ட் தாசேக் புத்ரியில் நடைபெற்ற குவாங் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது அவர் இவ்வாறு சொன்னார்.

காலை 10.00 மணி முதல் நடைபெற்ற இந்த மலிவு விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கினர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை இத்தொகுதியில் 52 முறை நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 10,000 குடும்பங்கள் வரை பயன்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :