NATIONAL

பகுதி நேரத் தொழிலில் ஈடுபட்டவர்களின் நலனைக் காக்கப் புதிய சட்டம்- அரசு ஆய்வு

ஷா ஆலம், பிப் 27- பகுதி நேர அல்லது சுயத் தொழிலில் ஈடுபட்டவர்களின் நலனைக் காப்பதற்காகப் பிரத்தியேக சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

தொழிலாளர் சட்டம், சபா மற்றும் சரவா தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பும் குறைந்த பட்சச் சம்பளச் சலுகையும் இல்லாதக் காரணத்தால் இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார் கூறினார்.

இத்தகைய உபரி பொருளாதாரத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் காப்பதற்குப் பிரத்தியேகச் சட்டம் இல்லாதக் காரணத்தால் நாம் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகிறோம்.

ஆகவே, அத்தரப்பினருக்கு விரிவான அளவில் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய பிரத்தியேகச் சட்டத்தை உருவாக்குவது குறித்து நாங்கள் ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று ஷா ஆலம் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் அஸ்லி யூசுப் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
உபரி பொருளாதாரத் துறை சார்ந்த தொழிலாளர்களின் நலன் காக்க அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாடு குறித்து அஸ்லி யூசுப் கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :