NATIONAL

பிரதமருடன் ஆஸி. வெளியுறவு அமைச்சர் சந்திப்பு- பொருளாதார, வட்டார விவகாரங்கள் குறித்து பேச்சு

கோலாலம்பூர், பிப் 28-  ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் செனட்டர் பென்னி வோங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று புத்ராஜெயாவில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் நலன் சம்பந்தப்பட்ட பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் வட்டார நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியாவின் நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா விளங்குகிறது. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பென்ஸ், செனட்டர் வோங் வாயிலாகத் தனது வாழ்த்துகளை எனக்கு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் சி.எஸ்.பி. (விரிவான விவேக பங்காளித்துவம்) அமலாக்கம் மீதான மலேசியா-ஆஸ்திரேலியா தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் என்று அன்வார் சொன்னார்.

மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் தற்காப்பு, அறிவியல், கல்வி, பயங்கரவாதத் துடைத்தொழிப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் வலுவான ஒத்துழைப்பை நல்கி வருவதாக விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கை கூறியது.


Pengarang :