ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தினால் 1,591 பேர் பாதிப்பு

ஜொகூர் பாரு, மார்ச் 1- ஜொகூர் மாநில மக்கள் கடுமையான வெள்ளப் பிரச்சனையிலிருந்து மீண்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் மறுபடியும் அம்மாநிலத்தை வெள்ளப் பேரிடர் உலுக்கியுள்ளது.

நேற்று காலை முதல் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக அம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி அம்மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள 21 துயர் துடைப்பு மையங்களில் 1,591 பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஜொகூர் மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

சிகாமாட், குளுவாங் மற்றும் ஜொகூர் பாருவில் தலா ஆறு துயர் துடைப்பு மையங்களும் கோத்தா திங்கியில் மூன்று துயர் துடைப்பு மையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக அச்செயலகம் தெரிவித்தது.

இந்த துயர் துடைப்பு மையங்கள் யாவும் நேற்றிரவு 10.30 மணி தொடங்கி இன்று அதிகாலை 3.20 மணி வரை கட்டங் கட்டமாகத் திறக்கப்பட்டன. வெள்ளம் காரணமாகச் சிகாமாட் மாவட்டத்தில் 209 குடும்பங்களும் குளுவாங்கில் 162 குடும்பங்களும் ஜொகூர் பாருவில் 131 குடும்பங்களும் கோத்தா திங்கியில் 32 குடும்பங்களும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளன.

இதனிடையே, மாநிலத்திலுள்ள பத்து மாவட்டங்களில் நாளை காலை வரை அபாய அளவிலான மிகக் கனத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.


Pengarang :