NATIONAL

வாகனத்தின் மேற்கூரையில் தலையை நீட்டியப்படி சிறார்கள் பயணம்- ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டார்

ஈப்போ, மார்ச் 3- பல்நோக்கு வாகனம் ஒன்றின் சன்ரூஃப் எனப்படும் மேற்கூரை வழியாக இரு சிறார்கள் தலையை நீட்டியபடி பயணம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் பயணிகளைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

பேஸ்புக் வாயிலாக நேற்று பகிரப்பட்ட 29 விநாடி மற்றும் 9 விநாடி கொண்ட இரு காணொளிகள் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைவர் யாஹ்யா ஹசான் கூறினார்.

அப்பிள்ளைகள் வாகனத்தின் திறந்த மேற்கூரை வழியாகத் தலையை வெளியே நீட்டியபடி பயணிக்க அனுமதித்ததன் வழி அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அந்த ஓட்டுநர் அலட்சியாகச் செயல்பட்டுள்ளார் சொன்னார்.

இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷாவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு மணி 10.40 அளவில் நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது அந்த 16 மற்றும் 13 வயதுடைய அவ்விரு சிறார்களின் பெற்றோர் வாகனத்தில் பயணித்த வேளையில் உறவினர் ஒருவர் அவ்வாகனத்தைச் செலுத்தியுள்ளார் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த காட்சியைப் படம் பிடித்தவர் போலீசில் புகார் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பிறரின் உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :