NATIONAL

பொது மக்களுக்கு உதவ மெனு ரஹ்மா திட்டத்தை அறிமுகப்படுத்துவீர்- வணிகர்களுக்குச் சிலாங்கூர் அரசு வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 3- பொது மக்களுக்குக் குறிப்பாக உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக தங்களின் வர்த்தக மையங்களில் மெனு ரஹ்மா எனும் கருணை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்படி உணவக உரிமையாளர்களைச் சிலாங்கூர் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவின பிரச்சனையைச் சமாளிக்கும் விதமாக இந்த மெனு ரஹ்மா திட்டத்தை உணவக உரிமையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் அமல்படுத்தலாம் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி கூறினார்.

தற்போது பயனீட்டாளர்கள் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. விற்கப்படும் விலைகேற்ப இந்த உணவும் தரமானதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக வர்த்தகர்கள் தங்கள்ன் சொந்த முயற்சியில் இந்த மெனு ரஹ்மா திட்டத்தை அமல்செய்வதை மாநில அரசு ஊக்குவிக்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 7, டெலி தாய் மற்றும் செக்சன் 14, கேஃபே சென்ட்லில் மாநில நிலையிலான மெனு ரஹ்மா திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மெனு ரஹ்மா திட்டத்தின் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் அதன் வாயிலாகச் சமுதாயத்திற்கு உரிய பங்களிப்பை வழங்குவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பொது மக்களுக்குக் குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பரம ஏழைகளுக்கு உதவும் வகையில் 5.00 வெள்ளிக்கும் குறைவான விலையில் உணவு வழங்கக் கூடிய மெனு ரஹ்மா திட்டத்தை அரசாங்கம் அண்மையில் அறிமுகம் செய்தது.


Pengarang :