NATIONAL

சிறார் மேம்பாட்டு மசோதா மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், மார்ச் 3- இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மசோதாக்களில் சிறார் மேம்பாட்டுக் கொள்கை தொடர்பான மசோதாவும் ஒன்றாகும்.

சிறார்களின் வாழ்க்கை சுபிட்சத்தையும் உகந்த சூழலையும் கொண்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கத்திலான இந்த மசோதா கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சிறார்களின் உரிமைகளையும் இந்த மசோதா உள்ளடக்கியுள்ளது. சுபிட்சமாக வாழ்வதில் தங்களுக்கு உள்ள உரிமையை அவர்களும் அறிந்திருக்க வேண்டும். பதினெட்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட அனைத்து சிறார்களையும் இந்த சட்ட மசோதா உள்ளடக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த மசோதா அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் இத்தகைய கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலமாகச் சிலாங்கூர் விளங்கும். தொலைநோக்கும் போட்டியிடும் ஆற்றலும் கொண்ட தலைமுறையை உருவாக்க நாம் விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

ஆய்வு நிறுவனமான மெர்டேக்கா சென்டர் மேற்கொண்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மசோதாவின் இலக்குகள் வரையப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :