NATIONAL

மலாக்காவில் வெள்ளம் வடிகிறது- பகாங்கில் 2,268 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், மார்ச் 8- வெள்ளத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகப் பத்து பஹாட் விளங்கிறது. இங்கு இன்று காலை நிலவரப்படி 27,774 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் வானிலை நன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள வேளையில் வெள்ள நிலைமையும் சீரடைந்து வருகிறது. அதே சமயம் மலாக்காவில் வெள்ளம் காரணமாகத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் பகாங் மாநிலத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,141 பேராக உயர்வு கண்டுள்ளது. நேற்றிரவு 8.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 40,008 பேராக இருந்தது. மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 202 துயர் துடைப்பு மையங்களில் அவர்கள் அனைவரும் தங்கியுள்ளனர்.

பத்து பஹாட்டில் 27,774 பேரும் மூவாரில் 4080 பேரும் தங்காக்கில் 32,536 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கம் நாடியுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

மலாக்கா மாநிலத்தைப் பொறுத்த வரை ஜாசின் மாவட்டத்தில் இன்று காலை வரை 159 குடும்பங்களைச் சேர்ந்த 598 பேர் ஐந்து நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு 8.00 மணியளவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 606 பேர் துயர் துடைப்பு மையங்களில்
தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகாங் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 2,268 பேர் 16 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயல்குழு தெரிவித்தது.


Pengarang :