பெரிய வீடு வாங்க விரும்புவோரிடமிருந்து ஒற்றை அறை வீடுகளை அரசே வாங்கிக் கொள்ளும்- ரோட்சியா

சிப்பாங், மார்ச் 12- ஒற்றை அறை வீடுகளை வைத்திருப்போர் பெரிய மற்றும் விலை கூடுதலான வீடுகளை வாங்க விரும்பினால் சம்பந்தப்பட்ட அந்தச் சிறிய வீடுகளை மாநில அரசிடமே மறுபடியும் அவர்கள் விற்கலாம்.

திருமணமாகாத தரப்பினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வீடுகள்  சந்தையில் தொடர்ந்து போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

தாங்களும் சுதந்திரமான சூழலில் வசிக்க வேண்டும் என திருமணமாகாத தரப்பினரும் விரும்புவதால் இத்தகைய ஒற்றை அறை வீடுகள் அவர்களுக்காக தயார் செய்யப்படுகின்றன. திருமணமாகி பெரிய வீடுகளைக் கொள்முதல் செய்ய அவர்கள் விரும்பும் பட்சத்தில் அந்த வீடுகளை மறுபடியும் வாங்கிக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

அத்தகைய ஒற்றை அறை வீடுகளை அவர்கள் மாநில அரசிடமே விற்கலாம். அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் புதிய வீட்டை வாங்க முடியும் என்று நேற்று இங்கு நடைபெற்ற சிப்பாங் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த கட்டுபடி விலை வீடுகளுக்கான விற்பனை அடுத்த மூன்றாண்டுகளில்  தொடங்கும் என்றும் ரோட்சியா சொன்னார்.

நகர்ப்புறங்களில் கட்டப்படவிருக்கும் 450 சதுர அடி பரப்பளவிலான இந்த ஒற்றை அறை வீடுகள் திருணமாகாத தரப்பினருக்கு வெ.114,750 விலையில் விற்கப்படும் என்று ரோட்சியா கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் கூ 3.0 வீடமைப்புக் கொள்கையின் கீழ் இந்த வீடுகள் ஷா ஆலம், சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 


Pengarang :