ECONOMYPENDIDIKAN

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு உதவ 18 திட்டங்கள்- கல்வியமைச்சர் தகவல்

புக்கிட் மெர்தாஜம், மார்ச் 12- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ பிரத்தியேகமாக 18 நிதியுதவித் திட்டங்களை கல்வியமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக அதன் அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

விண்ணப்பதாரர்களின் தேவையின் அடிப்படையில் மட்டுமே உதவிகள் வழங்கப்படும் என்பதால் சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கபெற்றப் பின்னரே எத்தகைய உதவிகள் வழங்குவது எனத் தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கு முந்தைய பேரிடர் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. பள்ளி திறக்கப்பட்டப் பின்னர் அது குறித்து முடிவெடுக்கவுள்ளோம். மாவட்ட மற்றும் மாநில கல்வித் துறையிடம் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பொறுத்து  உதவித் திட்டங்கள் தீர்மானிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு, ஜோகூர் வெள்ள நிலவரத்தைக் கூறலாம். அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்கான 18 திட்டங்களை நாம் முன்னெடுக்கலாம். எது எப்படியிருப்பின், மாணவர்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதுதான் முக்கியம் என்றார் அவர்.

நேற்று இங்கு புற்றுநோய்ச் சிறார்களின் நண்பர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுவாக, வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பாட புத்தகம், சீருடை மற்றும் இதர சமூக நல உதவிகளை எதிர்பார்ப்பது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய பள்ளித் தவணை தொடங்கும் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந் மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :