SELANGOR

திருமணமாகாதோரும் சொந்த வீடு பெறும் வகையில் சிலாங்கூர்கூ வீட்டுடைமைக் கொள்கை மறுசீரமைப்பு

ஷா ஆலம், மார்ச் 15- சிலாங்கூர்கூ 3.0 வீட்டுடைமைக் கொள்கையின் அமலாக்கம் திருமணமாகாதோர் மற்றும் திருமணமானவர்கள் சொந்த வீட்டைப் பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வீடு வாங்குவது தொடர்பான நடைமுறை தொடர்பில் ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச் செலவினத்தை குறைப்பது உள்ளிட்ட அம்சங்களை இந்த கொள்கை உள்ளடக்கியுள்ளது என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

மேம்பாட்டு மண்டலம், விபரக்குறிப்புகள், கட்டுப்பாடு மற்றும் மூன்று அறை தொடர்புடைய முந்தைய சிலாங்கூர்கூ திட்டங்களைப் புதியக் கொள்கை உள்ளடக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவும் 35 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்குக் குறிப்பாக திருமணமாகாதவர்கள் அல்லது புதிதாகத் திருமணமானவர்களுக்குப்
பிரத்தியேகத் திட்டத்தை அமல்படுத்தவும் இப்போது நாம் அனுமதி வழங்குகிறோம் என்று அவ்ர் மேலும் சொன்னார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று ஜெராம் உறுப்பினர் முகமது சாயிட் ரோஸ்லி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த புதிய கொள்கையின் கீழ் சிலாங்கூர்கூ வீடுகள் 250,000 வெள்ளிக்கும் குறைவாக இருப்பது உறுதி செய்யப்படுவதோடு வழக்கறிஞர் கட்டணம் மற்றும் உரிமை மாற்றச் செலவினமும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இது தவிர, பராமரிப்புச் செலவுகளும் ஈராண்டுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் வீடு வாங்குவோர் கூடுதல் செலவினம் குறித்து கவலைப்படவேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :