NATIONAL

முறையாகப் பராமரிக்காததால் பூனைகள் உயிரிழப்பு-விற்பனை முகவருக்கு ஈராண்டுச் சிறை, அபராதம்

கோலாலம்பூர், மார்ச் 29- தனது வீட்டில் ஐந்து பூனைகளைக் கூண்டில்
அடைத்து உணவு தராமல் பட்டினியால் சாகவிட்ட ஆடவர் ஒருவருக்கு
இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஈராண்டுச் சிறைத்தண்டனையும்
50,000 வெள்ளி அபராதமும் விதித்தது.

இக்குற்றம் தொடர்பில் விற்பனை முகவரான லிம் சியா லின் (வயது 31)
என்பவருக்கு எதிராக 2015ஆம் ஆண்டு பிராணிகள் பாதுகாப்புச் சட்டத்தின்
29(1)(டி) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. தமக்கு எதிரான
குற்றச்சாட்டை அந்த ஆடவர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி
சித்தி அமினா கசாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டுச்
சிறைத்தண்டனையை அனுபவிக்க லிம்மிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பில் துணைப் பப்ளிக் புரோசிகியூட்டர் அகமது ஹக்கிமி வான்
அகமது ஜாபர் வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட லிம்
சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

செராஸ், பண்டார் ஸ்ரீ பெர்மைசூரி, பாயு தாசேக் ஆடம்பர அடுக்குமாடி
குடியிருப்பில் லிம் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில்
கூறப்பட்டது.

அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அண்டை வீட்டார்
கடந்த மார்ச் 11ஆம் தேதி புகார் அளித்ததைத் தொடர்ந்து அவ்வீட்டைச்
சோதனையிட்ட அதன் உரிமையாளர் அங்கு பூனைகளின்
எலும்புக்கூடுகளும் சிதைந்த உடல் பாகங்களும் கிடப்பதைக் கண்டு
அவற்றை அகற்றும்படி லிம்மிற்கு உத்தரவிட்டார்.

சில தினங்களுக்குப் பின்னர் வாடகையை வசூலிப்பதற்காக மீண்டும்
அங்கு வந்த உரிமையாளர் பூனைகளின் உடல் பாகங்கள் இன்னும்
அகற்றப்படாததை அறிந்து இது குறித்து போலிசில் புகார் செய்தார்.


Pengarang :