SELANGOR

மரம் விழுந்து கார்கள் சேதம்- புகைப்படம், போலீஸ் புகாருடன் மாநகர் மன்றத்திடம் இழப்பீடு கோரலாம்

ஷா ஆலம், மார்ச் 30- புயல் காற்றில் விழுந்த மரங்களால் சேதமடைந்த
கார்களின் உரிமையாளர்கள் காரின் புகைப்படம் மற்றும் போலீஸ்
புகாருடன் காப்புறுதி இழப்பீட்டைப் பெறுவதற்கு ஷா ஆலம் மாநகர்
மன்றத்திடம் விண்ணப்பிக்கலாம்
ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் பொது இழப்பீட்டிற்கான காப்புறுதி
பாதுகாப்பைக் கொண்டுள்ளதாக ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
மரங்கள் விழுந்து தங்கள் கார்கள் சேதமடையும் பட்சத்தில் ஷா ஆலம்
மாநகர் மன்ற அதிகாரிகள் சம்பந்த இடத்திற்கு வந்து சேதத்தை மதிப்பீடு
செய்யும் வரை அதன் உரிமையாளர்கள் காத்திருக்க வேண்டியதில்லை
என்று அவர் சொன்னார்.
சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப்
பணியாளர்களை பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தடுக்க வேண்டிய
அவசியம் இல்லை. பொது மக்களின் பாதுகாப்பு கருதி துப்புரவுப் பணியை
மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அப்பணியாளர்களுக்கு உள்ளது என்று
அவர் குறிப்பிட்டார்.
மரம் விழுந்த காரணத்தால் தங்கள் வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதை
சித்தரிக்கும் காட்சியை புகைப்படம் எடுத்து அதனை இழப்பீட்டு
நோக்கத்திற்காக மாநகர் மன்றத்திடம் ஒப்படைத்தால் போதுமானது என
அவர் சொன்னார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் இன்று 2023-2030 ஷா ஆலம்
விவேக நகர நடவடிக்கைத் திட்ட பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்குள்ள கோத்தா கெமுனிங் பகுதியில நேற்று மாலை பெய்த பலத்தக்
காற்றுடன் கூடிய மழையில் மரங்கள் விழுந்து பல வாகனங்கள்
சேதமடைந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
ஜாலான் அங்கிரிக் மொக்காரா சாலையில் தனது காருக்குச் சேதத்தை
ஏற்படுத்திய மரத்தை அகற்ற முயன்ற தீயணைப்பு வீர்ர்களைத்
சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் தடுத்ததாக தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையினர் கூறியிருந்தனர்.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில்
இத்தகைய சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களின்
உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்து தங்கள் அடையாளக் கார்டு,
வாகன பதிவுப் பத்திரம் மற்றும் இழப்பீட்டுக் கடிதம் ஆகியவற்றை
விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் உள்ள வாடிக்கையாளர் முகப்பிடத்தில்
சமர்பிக்க வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.


Pengarang :