SELANGOR

நாற்பது விழுக்காட்டு மலேசியர்கள் எலும்பு, மூட்டு பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 30- எலும்பு மற்றும் மூட்டுகளின் பாதுகாப்பு குறித்து
போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சுமார் 40 விழுக்காட்டு
மலேசியர்கள் எலும்பு மற்றும் மூட்டு குறைபாட்டுப் பிரச்சனைகளை
எதிர்நோக்குகின்றனர்.

பொது மக்கள் பொதுவாக நீரிழிவு மற்றும் கொலெஸ்ட்ரோலைக்
கட்டுப்படுத்துவதில் காட்டும் அக்கறையை எலும்பு மற்றும் மூட்டு
பாதுகாப்பில் காட்டுவதில்லை என்று பினாங்கு பந்தாய்
மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூன்
ஹூக் வீ கூறினார்.

அதிகமானப் பெண்கள் அதாவது 80 விழுக்காட்டினர் ஐம்பது வயதை
எட்டும் போது குறிப்பாக மோனோபொஸ் கட்டத்தில் மூட்டு வலி
பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். அதே சமயம், 80 விழுக்காட்டுப்
பெண்களும் 20 விழுக்காட்டு ஆண்களும் எலும்பு மற்றும் மூட்டு வலி
பிரச்சனைக்கு ஆளாகுகின்றனர் என்று அவர் சொன்னார்.

இதற்கான பொதுவான அறிகுறிகள் முதுகெலும்பு, டிஸ்க் எனப்படும் வட்டு
மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஆகும் என்று நேற்று இங்கு மூவ்மெண்ட்
மேட்டர் எனும் இயக்கத்தையொட்டி நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில்
அவர் தெரிவித்தார்.

மலேசியர்களில் 25 லட்சம் பேர் முதுகுவலிப் பிரச்சனையினால்
அவதியுறுவது நோவு ஆய்வு மீதான அனைத்துலக சங்கத்தின் ஆய்வில்
தெரியவந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய வீட்டிலிருந்து
வேலை செய்யும் நடைமுறை மற்றும் வாழக்கை முறை ஆகியவை
இதற்கு காரணமாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.

எலும்பு மற்றும் மூட்டு வலி பிரச்சனைக்கு வயது மற்றும் உடல் எடை
ஆகியவையும் முக்கிய காரணங்களாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது, ஆரோக்கியமான
உணவை உட்கொள்வது, சீரான உடற்பயிற்சி ஆகியவை இந்த எலும்பு
மற்றும் மூட்டு வலி பிரச்சனையைத் தடுப்பதற்கான சிறந்த வழியாக
விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.


Pengarang :