SELANGOR

ஸ்ரீ மூடா மார்க்கெட்டில் காலியாக உள்ள கடைகளை நிரப்ப மாநகர் மன்றம் நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 30- செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா மார்கெட்டில்
காலியாக உள்ள கடைகளை நிரப்புவதற்கு தீவிர நடவடிக்கைகளை ஷா
ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்ட வருகிறது.

ஈராண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட அந்த மார்க்கெட்டில் உள்ள
200க்கும் மேற்பட்ட கடைகளில் 80 முதல் 90 கடைகள் வரை காலியாக
உள்ளது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மாநகர்
மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற மாநகர் மன்றத்தின் ஏழு துறைகளை
உள்ளடக்கிய கூட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த மார்க்கெட்டில்
மேலும் அதிகமான வணிகர்களை ஈர்ப்பதற்குரிய வழிவகைகள் குறித்து
விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த மார்க்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தரம் உயர்த்தும் பணிகளின்
மூலம் மேலும் அதிகமான வணிகர்கள் இங்கு வியாபாரம் புரிவதற்குரிய
வாய்ப்பினை ஏற்படுத்த முடியும்.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கடைகளுக்கான வாடகையை குறைப்பது மற்றும் வர்த்தக லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்குவது போன்ற சலுகைகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

வீடுகளிலும், சாலையோரங்களிலும் சிறிய அளவில் வணிகம் புரிவோர்
குறிப்பாக இந்தியர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து
வசதிகளுடன் கூடிய இந்த மார்க்கெட்டில் வியாபாரம் புரிய
முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :