NATIONAL

இரகசியங்கள் கசிவதைத் தடுக்க கூட்டங்களில் கைப்பேசிக்குத் தடை- மலாக்கா அரசு முடிவு

மலாக்கா, ஏப் 5- மலாக்கா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல் ராவுப் யூசோ தாம் தலைமையேற்கும்
கூட்டங்களின் கைபேசிக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய
நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இரகசியங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்
நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

மாநில முதலமைச்சர் தலைமையேற்கும் இரகசியமானது என
வகைப்படுத்தப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்வோர் கைப்பேசியை
உடன் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர்
குறிப்பிட்டார்.

மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் தாம் நடத்திய முதலாவது
சந்திப்பின் போது பல்வேறு புதிய நடைமுறைகள் குறித்து அவர்களுக்குக்
கோடிட்டு காட்டியதாக அவர் மேலும் சொன்னார்.

தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினரான அப்துல் ராவுப் மலாக்கா
மாநிலத்தின் 13வது முதலமைச்சராகக் கடந்த மார்ச் 31ஆம் தேதி
பதவியேற்றுக் கொண்டார்.


Pengarang :