NATIONAL

திரங்கானுவில் மலேரியா காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

கோலா திரங்கானு, ஏப்ரல் 5: மாநிலத்தில் சமீபகாலமாக மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திரங்கானு மாநில சுகாதாரத் துறை (ஜேகேஎன்டி) அறிவுறுத்துகிறது.

திரங்கானுவில் 2022 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் எட்டு வழக்கு எண்ணிக்கையில் இருந்து 17 வழக்குகளாக இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது.

மேலும் இந்த ஆண்டு பதிவான 17 வழக்குகளில் 16 வழக்குகள் ஜூனோடிக் மலேரியாவும், மற்றொரு வழக்கில் இறக்குமதி செய்யப்பட்ட மனித மலேரியாவும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது என்று அதன் இயக்குநர் டத்தோ டாக்டர் காஸ்மானி எம்போங் கூறினார்.

“கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 112.5 சதவீதம் அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம், மேலும் உலு  திராங்கானு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன, என்று கூறினார்.

“இருப்பினும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைப் போலவே, மலேரியாவால் இதுவரை எந்த இறப்புகளும் பதிவாகவில்லை,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

அதன்படி, காய்ச்சல், சளி, வியர்வை மற்றும் உடல் பலவீனம் போன்ற மலேரியாவின் அறிகுறிகள் உணர்ந்தால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர் காசிமணி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

தடுப்பு நடவடிக்கையாக, வனப்பகுதிகள் மற்றும் வன விளிம்புகளில் வசிப்பவர்கள், கொசுக்கடியிலிருந்து முழு உடலையும் பாதுகாக்கும் ஆடைகளை அணியவும், கொசு விரட்டியை பயன்படுத்தவும், இரவில் வெளியில் இருப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“மலேரியாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.


– பெர்னாமா


Pengarang :