NATIONAL

மரணம் ஏற்படும் அளவுக்கு வாகனத்தை கவனக்குறைவாக செலுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட், ஏப் 6- கவனக் குறைவாக வாகனத்தை செலுத்தி ஆடவர்
ஒருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக விற்பனை முகவர்
ஒருவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த மாதம 27ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் பத்து பஹாட், பாரிட்
சூலோங், பாரிட் ஜாலில் சாலையில் மஸ்டா சிஎக்ஸ் 5 ரக வாகனத்தை
கவனக்குறைவாக செலுத்தியதன் மூலம் முகமது காமருள் ஷாரில்
ஏ.சமாட் (வயது 43) என்பவர் உயிரிழக்க காரணமாக இருந்ததாக டான்
மின் சுன் (வயது 32) என்ற அந்த ஆடவர் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளார்.

மாஜிஸ்திரேட் சித்தி ஜூபைடா மஹாட் முன்னிலையில் தமக்கு எதிராக
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை டான் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 10 ஆண்டு
வரையிலான சிறைத்தண்டனை, 50,000 வெள்ளிக்கும் மேற்போகாத சிறை
மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்க வகை
செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது
பிரிவின் கீழ அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றஞ்சாட்டப்பட்ட டானை
ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அரசுத்
தரப்பு வழக்கறிஞர் சித்தி கத்திஜா காலிட் நீதிமன்றத்தில் பரிந்துரைத்தார்.

எனினும், மனைவி, ஒரு வயது குழந்தை மற்றும் வயதான தாயார்
ஆகியோரை பராமரிக்கும் பொறுப்பில் தனது கட்சிக்காரர் உள்ளதால்
அவரை குறைந்த ஜாமீன் தொகையில் விடுவிக்கும்படி டானின்
வழக்கறிஞர் மின் சுன் கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை 3,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி
வழங்கிய மாஜிஸ்திரேட், வரும் மே 23ஆம் தேதிக்கு இந்த வழக்கு
விசாரணையை ஒத்தி வைத்தார்.


Pengarang :