MEDIA STATEMENTNATIONAL

ஆட்சியாளர்களை நிந்திக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட நபர் கைது 

கோலாலம்பூர், ஏப் 6- ஆட்சியாளர்களை நிந்திக்கும் வகையிலான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கெடா மாநிலத்தின் பெண்டாங்கில் நேற்று கைது செய்தனர்.

அந்த 49 வயது சந்தேகப்பேர்வழி துக் சிக் எனும் தனது பேஸ்புக் கணக்கின் வாயிலாக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நிந்தனைக் கருத்துகளை பதிவேற்றம் செய்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.

கைதான அந்நபர் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1) பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்படுள்ளதாக அவர் சொன்னார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர்  விவேகம் உள்ளவர்களாகவும் குறிப்பாக 3 ஆர் எனப்படும் இனம், சமயம், மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொது மக்கள் மத்தியில் பதட்டத்தையும் அமைதிக்கு குந்தகத்தையும் விளைவிக்காதவர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரப்பினர் விஷயத்தில் அரசாங்கம் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்பதோடு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :