SELANGOR

சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் விவகாரத்திற்குத் தீர்வு காண கவுன்சிலர் சிவபாலன் வலியுறுத்து

கோல சிலாங்கூர், ஏப் 19- இங்குள்ள பண்டார் ஸ்ரீ கோல்பீல்ட்ஸ் மற்றும்
பண்டார் புஞ்சா ஆலம் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமாகக்
குப்பை கொட்டும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில்
கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் எம். சிவபாலன்
ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் இப்பிரச்சனைக்கு நிரந்தர
தீர்வு காண வலியுறுத்தி நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் முகமது
யுஸ்லி அஸ்கந்தாரிடம் அவர் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கை காரணமாக
லத்தார் நெடுஞ்சாலை சந்திப்பு, பண்டார் கோல்பீல்ட் மற்றும் பண்டார்
புஞ்சா ஆலம் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுவதாக
சிவபாலன் தெரிவித்தார்.

இந்த குப்பைகளிலிருந்து வெளிப்படும் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள
முடியாமல் அப்பகுதியில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த
மக்கள் சொந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் வாடகைக்கு
குடியிருக்கச் சென்று விட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்த குப்பைகளிலிருந்து வெளிப்படும் அசுத்தமான நீர் வட்டார மக்களின்
உடலாரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு டிங்கி மற்றும்
சரும நோய்கள் பரவுவதற்கும் வழி வகுத்துள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.

அப்பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் வட்டார மக்களை
நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்கும் ஏதுவாக நகராண்மைக் கழகம்
இவிவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அந்த சட்டவிரோத குப்பை
கொட்டும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்
சிவபாலன் வலியுறுத்தினார்.


Pengarang :