NATIONAL

காவல்துறை அதிகாரியை தாக்கியதாக நம்பப்படும் நால்வர் கைது

ஜொகூர் பாரு, ஏப்ரல் 26: ஜாலான் கூலாய்-கோத்தா திங்கி, கிலோமீட்டர் 7, ஓப் செலாமட் பணியைச் செய்து கொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக நம்பப்படும் நான்கு நபர்களைக் காவல்துறையினர் ஏப்ரல் 23 அன்று கைது செய்தனர்.

23 முதல் 39 வயதுக்குட்பட்ட அனைத்து உள்ளூர் சந்தேக நபர்களும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அவர்கள் அனைவரும் இந்நகரம் மற்றும் கூலாயில் கைது செய்யப் பட்டதாகக் கூலாய் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் தோக் பெங் இயோவ் தெரிவித்தார்.

சம்பவத்தன்று பிற்பகல் 3.04 மணியளவில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகரியால் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“ஓப் செலாமட் கடமையை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குழுவால் தாக்கப்பட்டதாக அக்காவல்துறை அதிகாரி காவல்துறையில் புகார் அளித்தார்.

“முதற்கட்ட விசாரணையின் முடிவில், கலவரம் மற்றும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டதை நான்கு பேர் ஒப்புக்கொண்டனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நான்கு சந்தேக நபர்களில் மூன்று பேர் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்த காலப் பதிவுகளை வைத்திருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து நபர்களும் ஏப்ரல் 25 தொடங்கி நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர் மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 186 மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 147 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :