NATIONAL

ஜே.பி.ஜே. சோதனையில் 14,514 குற்ற அறிக்கைகள் வெளியீடு, 500 மோட்டார் சைக்கிள் பறிமுதல்

ஈப்போ, ஏப் 27- இம்மாதம் 18 முதல் 25ஆம் தேதி வரை சாலை
போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) மேற்கொண்ட நோன்பு பெருநாள்
சாலை பாதுகாப்பு சோதனையின் போது 14,514 குற்ற அறிக்கைகள்
வெளியிடப்பட்டதோடு 500 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்
செய்யப்பட்டன.

பல்வேறு சாலை போக்குவரத்து குற்றங்களுக்காக 1987ஆம் ஆண்டு
சாலை போக்குவரத்து சட்டத்தின் (சட்டம் 333) கீழ் சம்பந்தப்பட்ட
வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜே,பி.ஜே.
அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமஹான்
கூறினார்.

இக்காலக்கட்டத்தில் 51,039 மீது சோதனை மேற்கொள்ளப்பட்ட
வேளையில் காப்புறுதி பாதுகாப்பு இல்லாதது, வாகனமோட்டும்
லைசென்ஸ் இல்லாதது உள்ளிட்ட குற்றங்களுக்காக 500 மோட்டார்
சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 291 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக நேற்றிரவு இங்கு நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் சொன்னார்.

வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாதக் குற்றத்திற்காக 4,583
வாகனமோட்டிகளுக்குக் குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறிய அவர்,
சாலை வரி காலாவதியானதற்கு 2,600 குற்றப்பதிவுகளும் காப்புறுதி
இல்லாத குற்றத்திற்கு 2,364 குற்றப்பதிவுகளும் வாகனமோட்டும்
லைசென்ஸ் காலாவதியானதற்கு 168 குற்றப்பதிவுகளும் கவசத் தொப்பி
அணியாததற்கு 160 குற்றப்பதிவுகளும் சாலை சமிக்ஞை விளக்கை
மீறியதற்காக 120 குற்றப்பதிவுகளும் வழங்கப்பட்டன என்றார் அவர்.

பேராக் மாநிலத்தைப் பொறுத்த வரை கடந்த 18 முதல் 25ம் தேதி வரை
7,146 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டதாகவும் அவற்றில் 1,313
மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக 333வது சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :