SELANGOR

மூத்தக் குடிமக்களுக்குக் கோவிட்-19 மற்றும் நியுமகோக்கல் தடுப்பூசிகள்- செல்வேக்ஸ் 2023 வழங்குகிறது

ஷா ஆலம், ஏப் 27- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசி திட்டம்
2023 விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 200,000
டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளும் 10,000 டோஸ் நியுமகோக்கல்
தடுப்பூசிகளும் மூத்தக் குடிமக்களுக்கு இலவசமாக
வழங்கப்படவிருக்கின்றன.

சுமார் 15 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான இந்த திட்டம் கிளினிக்
செல்கேர் ஒருங்கமைப்பு மற்றும் மலேசிய செம்பிறைச் சங்கத்தின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொது சுகாதாரத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மிகவும் பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள்
விளங்குவதோடு அவற்றின் திறன் அறிவியல்பூர்வமாகவும்
நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் மேலும்
அதிகமான சிலாங்கூர் மக்கள் பாதுகாப்பையும் கூடுதலான நோய் எதிர்ப்புச்
சக்தியையும் பெற முடியும் என அவர் சொன்னார்.

மக்களின் பாதுகாப்புக்கு அரணாக விளங்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி
சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு மாநில அரசு எப்போதும் முன்னுரிமை
அளித்து வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் மாநில மக்களுக்கு இலவசமாக
தடுப்பூசியை வழங்குவதற்காக மாநில அரசு கடந்த 2021ஆம் ஆண்டு
முதல் 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.

குறைந்த வருமானம் பெறுவோர், மூத்தக் குடிமக்கள் மற்றும்
தொழிற்சாலை ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தை
விரைவுபடுத்துவதற்காக மாநில அரசு செல்வேக்ஸ் கம்யூனிட்டி மற்றும்
செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரி ஆகிய இரு திட்டங்களைக் கடந்த 2021 ஜூன்
மாதம் தொடங்கியது.

மொத்தம் 20 கோடி வெள்ளி செலவிலான இந்த திட்டத்திற்கு மத்திய அரசு
முழு அங்கீகாரத்தை வழங்கியதோடு பிக் எனப்படும் தேசியத் தடுப்பூசித்
திட்டத்திலும் இந்த செல்வேக்ஸ் திட்டத்தை இணைத்தது.


Pengarang :