NATIONAL

அபாயகரமான  ‘வீலி’ முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

கோத்தா பாரு, ஏப்.30: அபாயகரமான ‘வீலி’ முறையைச் செய்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவியோடு ஆபத்தான நிலையில் ஓட்டியதாக 17 வயது நபர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மாஜிஸ்திரேட் முஹம்மது ஃபித்ரி மொக்தார், இவ் வழக்கை மீண்டும் ஜூன் 20 அன்று ஒத்தி வைத்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உத்தரவாதத்துடன் RM900 பிணையில் செல்ல அனுமதித்தார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஏப்ரல் 22 அன்று மதியம் 12 மணியளவில் ஜாலான் கோத்தா பாரு-கோலா திரங்கானுவில், குற்றம் சாட்டப்பட்டவர் ஹோண்டா C100B மோட்டார் சைக்கிளில் முன் டயரை தூக்கிக்கொண்டு ஓட்டினார். இச்செயல் அவருக்கும் மற்ற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தானது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) பிரிவு 42(1)ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், RM5,000க்கு குறையாத மற்றும் RM15,000க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம்.

வழக்கு விசாரணையை துணை அரசு வழக்கறிஞர் நர்ஸ்யாபிகா முகமட் கையாண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் கிளந்தான் தேசியச் சட்ட உதவி அறக்கட்டளை வழக்கறிஞர் நோர் ஜைமா முகமது ஆஜரானார்.

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, விசாரணைக்கு உதவுவதற்காகத் தம்பதிகள் காவல் நிலையத்தில் சரணடையுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

– பெர்னாமா


Pengarang :