NATIONAL

வெப்பத் தாக்கத்தைத் தவிர்க்க வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பீர்- நிபுணர்கள் ஆலோசனை

ஷா ஆலம், மே 2- நடப்பு வெப்ப வானிலையைக் கருத்தில் கொண்டு
வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளும்படி பொது
மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட சுகாதாரப்
பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்க இத்தகைய பாதுகாப்ஹப
நடவடிக்கைகள் பெரிதும் துணை புரியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தற்போதை சீதோஷண நிலையின் தாக்கத்தை குறைக்க தினமும் 2.5
லிட்டர் அல்லது ஆறு கிளாஸ் நீரை அவசியம் அருந்த வேண்டும் என்று
மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சுகாதார நிபுணர்
இணைப் பேராசிரியர் டாக்டர் ஹலிஷா அப்துல் ரஹ்மான் கூறினார்.

ஒருவரின் உடலில் நீர்ச்சத்து குறையும் போது களைப்பும் சோர்வும்
ஏற்பட்டு வெப்ப பக்கவாதத்திற்கு ஆளாகும் சூழல் உண்டாகும். இதன்
காரணமாக மயக்கமும் மரணம் போன்ற பேராபத்துகளும் ஏற்படும்
சாத்தியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வெப்ப வானிலை நிலவும் தற்போதைய காலக்கட்டத்தில் தங்களைப்
பாதுகாத்துக் கொள்வதற்காகப் பொது மக்கள் நல்ல காற்றோட்ட வசதி
கொண்ட மூடப்பட்ட பகுதிகளில் அடைக்கலம் நாடுவது சிறந்தது எனக்
கூறிய அவர், நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் சூப் போன்ற
உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்றார்.

வெப்பம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தக்கூடிய வடமேற்கு பருவக்காற்று
காரணமாக வரும் ஜூன் மாதம் தொடங்கி எல் நினோ பருவநிலை
மாற்றத்தை நாடு எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Pengarang :