NATIONAL

கட்டுப்படுத்தப்பட்ட, மானிய விலை பொருள்கள் சம்பந்தப்பட்ட 156 மோசடிச் சம்பவங்கள் முறியடிப்பு

ஈப்போ, மே 2- இவ்வாண்டு மார்ச் முதல் தேதி தொடங்கி கடந்த
ஞாயிற்றுக்கிழமை வரை கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானிய விலை
பொருள்கள் சம்பந்தப்பட்ட 156 மோசடிச் சம்பவங்களை உள்நாட்டு வர்த்தகம்
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு முறியடித்துள்ளது.

ஓப்ஸ் திரிஸ் நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட
5,371 சோதனை நடவடிக்கைகளில் 441 கோடி வெள்ளி மதிப்புள்ள
பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சின் தலைமைச்
செயலாளர் டத்தோ அஸ்மான் முகமது யூசுப் கூறினார்.

ஆகக் கடைசியாகக் கெடா, புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள கிடங்கு
ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 லட்சம் வெள்ளி மதிப்பிலான டீசல் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் பெராப்பி குடிநுழைவு, சுங்க,
தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் 51,000 வெள்ளி மதிப்புள்ள டீசல் கைப்பற்றப்பட்டது என்றும்
அவர் சொன்னார்.

கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானிய விலை பொருளின் கடத்தல்
நடவடிக்கைகளைக் குறிப்பாக அமைச்சு கடுமையாகக் கருதுகிறது. குறிப்பாக
நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிகழும் இத்தகைய மோசடிகளால்
நாட்டிற்குப் பெரும் இழப்பும் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பும்
ஏற்படுகிறது என்றார் அவர்.


Pengarang :