NATIONAL

இளம் விளையாட்டாளர்களின் ஆற்றலை வெளிக்கொணர 2023 சீ போட்டி உதவும்- ஹன்னா இயோ

புத்ரா ஜெயா, மே 2- கம்போடியாவில் நடைபெறும் சீ போட்டியில்
மலேசிய அணியினர் பங்கேற்பதன் முக்கிய நோக்கம் இளம் மற்றும்
தயார் நிலை ஆட்டக்காரர்களின் திறனைக் வெளிக் கொணர்வதாகும் என்று
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ
கூறினார்.

உயர் நிலையிலான போட்டிகளில் பங்கேற்பதற்குரிய திறன்மிக்க இளம்
விளையாட்டாளர்கள் இல்லை என்ற நிலை உருவாகாமலிருப்பதை உறுதி
செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்
சொன்னார்.

இந்த சீ போட்டியில் மேம்பாடு மற்றும் நட்புறவு மீது நாங்கள் கவனம்
செலுத்துகிறோம். அதோடு மட்டுமின்றி, இளம் மற்றும் தயார் நிலை
ஆட்டக்காரர்களின் திறனையும் வெளிக்கொணர விரும்புகிறோம். இதன்
மூலம் விரைவில் நடைபெறவிருக்கும் ஆசிய மற்றும் ஒலிம்பிக்
போட்டிகளில் திறன்மிக்க இளம் மற்றும் தயார் நிலை ஆட்டக்காரர்களை
முன்னிலைப்படுத்த இயலும் என்றார் அவர்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு சம்பந்தப்பட்ட
மானியங்கள் மற்றும் பங்களிப்பு தொடர்பில் இன்று இங்கு நடத்தப்பட்ட
செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த போட்டியில் மலேசிய அணி 40 தங்கம், 37 வெள்ளி மற்றும் 64
வெண்கலப் பதக்கங்களை வெல்லும் என்ற தனது அறிவிப்பு அடைவதற்கு
சாத்தியமான ஒன்று எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மலேசிய ஆட்டக்காரர்களும் அதிகாரிகளும் கட்டங் கட்டமாக நோம்பென்
பயணமாகி வருகின்றனர். போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சில சிக்கல்கள்
அடுத்த சில தினங்களில் தீர்க்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :