NATIONAL

மலேசிய அரசாங்கத்தால் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட வங்காள தேச இளைஞர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், மே 2: ஜனவரி 17 அன்று போர்ட் கிள்ளான் வெஸ்ட்போர்ட் பகுதியில் உள்ள கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்டு மலேசிய அரசாங்கத்தால் சொந்த நாட்டிற்கு திருப்பி  அனுப்பப்பட்ட வங்காள தேச இளைஞர் நேற்று கொமிலா நகரில் உள்ள மோனோஹர்கஞ்சில் இருக்கும் அவரது வீட்டில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தனது முகநூல் பதிவில், எம்.டி.ரதுல் இஸ்லாம் ஃபாஹிம் (16) தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் தனியாகக் குளித்தக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்,“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

“மறைந்த எம்.டி. ரதுல் இஸ்லாம் ஃபாஹிமின் ஆன்மா சாந்தியடையட்டும், என்று கூறிய அவர், அந்த இளைஞரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

பிப்ரவரி 21 அன்று, ஆறு நாட்கள் கண்டெய்னரில் சிக்கிய இருந்த அந்த வாலிபரை மலேசிய அரசாங்கம் காப்பாற்றி அவரின் சொந்த நாட்டிற்கு அனுப்பியது.

வங்காளத் தேசச் சிட்டகாங்கில் உள்ள கண்டெய்னரில் தனது நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த இளைஞன் அதில் சிக்கி கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :