NATIONAL

சீ போட்டி- நாளைய ஆட்டத்தில் லாவோசை வெல்வது எளிதல்ல- பயிற்றுநர் இளவரசன்

புனோம் பென், மே 2- கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறும் 2023 சீ போட்டியின் 22 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு கால்பந்தாட்டம் நாளை நடைபெறுகிறது. பி பிரிவு ஆட்டத்தில் லாவோசை எதிர்கொள்ளும் மலேசிய ஆண்கள் அணி வெற்றிக் கனியை ஈட்டுவதில் பெரும் சவாலை எதிர்நோக்கி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பிரிவின் முதலாவது ஆட்டத்தில் வியட்னாமிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் இந்த ஆட்டத்தில் லாவோஸ் ஆட்டக்காரர்கள் உயிரைக் கொடுத்து போராடுபவர்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மலேசிய அணியின் பயிற்றுநர் இ. இளவரசன் கூறினார்.

லாவோஸ் அணியினர் முதலாவது ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி உள்ளதால் இந்த ஆட்டதில் நமக்கு கடும் மிரட்டலைக் கொடுப்பார்கள். இந்த ஆட்டம் நமக்கு கடும் சவாலாக விளங்கும் எனக் கருதுகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள புனோம் பென் விமான நிலையம் வந்தடைந்த இளவரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் அரங்கில் நாளை நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மலேசிய அணி வகுத்துள்ள வியூகம் மற்றும் மலேசியாவுக்கு மிரட்டலாக விளங்கக் கூடிய எதிரணி விளையாட்டாளர்கள் குறித்த கேள்விகளுக்கு இளவரசன் பதிலளிக்க மறுத்து விட்டார்.

எது எப்படி இருப்பினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற முடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :