NATIONAL

கிழக்குக் கரை மாநிலங்களில் சீனிப் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு- அமைச்சர் தகவல்

சிப்பாங், மே 2- கிழக்குக் கரை மாநிலங்களில் ஏற்பட்ட சீனி பற்றாக்குறைப்
பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும்
வாழ்க்கைச் செலவின் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹூடின் ஆயோப்
கூறினார்.

எம்.எஸ்.எம். மலேசியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான
ஜோகூர் மற்றும் பினாங்கு மாநிலத்தின் பிறையிலுள்ள சீனி ஆலைகள்
தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலங்களில் அந்த
உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்ட அந்த
ஆலைகள் கடந்த மாதம் 25ஆம் தேதி மீண்டும் செயல்படத்
தொடங்கியதாக அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக எம்.எஸ்.எம்.
மலேசியா மற்றும் சென்ட்ரல் சுகர் ரிபைனரி சென். பெர்ஹாட் ஆகிய
நிறுவனங்களுடன் அரசாங்கம் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு கரை மாநிலங்களில் ஏற்பட்ட சீனிப் பற்றாக்குறைப்
பிரச்சனைக்குத் ‘தீர்வு காணப்பட்டு விட்டது. இதனால் பொது மக்கள்
பதட்டமடைய வேண்டியதில்லை. மேலும், சீனி விலை இதனால்
உயரக்கூடும் என்ற வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றார் அவர்.

அந்த மாநிலங்களில் உள்ள மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை
வணிகர்களுக்கு நாளை முதல் சீனி விநியோகிக்கப்படும் என்றத்
தகவலையும் அமைச்சர் வெளியிட்டார்.

கிளந்தான் மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி வரை சீனிப்
பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்கள் முன்னதாகச் செய்தி
வெளியிட்டிருந்தன.


Pengarang :