NATIONAL

ஆசிரியர்களாகப் பணிபுரியும் கணவன் மனைவி இருவரும் விபத்தில் பலி

கங்கார், மே 3: பாடாங் பெசாரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் கணவன் மனைவி இருவர் நேற்று மதியம் ஜாலான் கங்கார்-பாடாங் பெசார் கிலோமீட்டர் 7.6 இல் நடந்த விபத்தில் உயிரிழந்தனர்.

பிற்பகல் 3.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 32 மற்றும் 28 வயதுடைய அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பாடாங் பெசார் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமது ஷோக்ரி அப்துல்லா தெரிவித்தார்.

“பாடாங் பெசாரில் இருந்து கங்கார் நோக்கிச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர் யு-டர்ன் செய்ததால் விபத்து ஏற்பட்டது. அச்சமயம் லாரி பாதிக்கப்பட்ட இருவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் 67 வயதான லாரி ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கங்காரில் உள்ள துவாங்கு பௌசியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுவதற்கு ஆதாரங்களை வழங்குமாறு காவல்துறை கேட்டுக் கொள்கிறது. மேலும் ஏதேனும் தகவல் இருந்தால் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் பி. பிள்ளையை 019-4702 312 என்ற எண்ணில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :