NATIONAL

பினாங்கில் நீர்த்தேக்கப் பகுதிகளில் செயற்கை மழையைப் பெய்விக்க நடவடிக்கை

கோலாலம்பூர், மே 3- பினாங்கு மாநிலத்தின் தெலுக் ஆயர் ஹீத்தாம்
மற்றும் தெலுக் பஹாங் நீர்த்தேக்கப் பகுதிகளில் இன்று செயற்கை
மழையைப் பெய்விக்கும் முயற்சியில் அரச மலேசியா ஆகாயப் படையும்
மலேசிய வானிலை ஆய்வுத் துறையும் ஈடுபட்டுள்ளன.

பினாங்கு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்
முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரும் வியாழக்கிழமை வரை
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று டி.யு.டி.எம். அறிக்கை ஒன்றில்
கூறியது.

காலை 11.00 மணிக்கு தொடங்கும் இந்த செயற்கை மழையைப்
பெய்விக்கும் நடவடிக்கையில் தலா 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட
நான்கு டாங்கிகளில் உப்பு கரைசல் நீர் நிரப்பப்படும் என்று அது
தெரிவித்தது.

இந்த கலவையைத் தயார் செய்ய குறைந்தது மூன்று மணி நேரம்
பிடிக்கும். அதன் பின்னர் அந்த நான்கு டாங்கிகளும் சி130எச் சரக்கு
விமானத்தில் ஏற்றப்படும். விமானி, துணை விமானி மற்றும் நான்கு
பணியாளர்களுடன் அந்த விமானம் சுபாங் விமான நிலையத்திலிருந்து
பினாங்கு செல்லும்.

மழை இல்லாத காரணத்தால் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம்
தொடர்ந்து குறைந்து வரும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்த
செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சி உரிய பலனைத் தரும் எனத்
தாங்கள் நம்புவதாக டி.யு.டி.எம். அந்த அறிக்கையில் தெரிவித்தது.


Pengarang :