SELANGOR

அந்நிய வியாபாரிகளின் ஆதிக்கம்- ஸ்ரீ மூடா பிளாசாவில் ஷா ஆலம் டத்தோ பண்டார் அதிரடிச் சோதனை

ஷா ஆலம், மே 3- அந்நிய நாட்டு வியாபாரிகளின் ஆதிக்கத்தில்
இருப்பதாகக் கூறப்படும் இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா பிளாசா
சந்தைக்கு ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல்
ஹமிட் நேற்று திடீர் வருகை புரிந்தார்.

அந்த சந்தையில் விதிமுறைகளுக்குப் புறம்பான முறையிலும்
உள்நாட்டினரின் வர்த்தக லைசென்சைப் பயன்படுத்தி அலிபாபா
முறையிலும் அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்வதாகப் பரவலாக எழுந்த
புகார்களைத் தொடர்ந்து அவர் இந்த அதிரடிச் சோதனையை நடத்தினார்.

டத்தோ பண்டாருடன் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு
நடராஜன் மற்றும் மாநகர் மன்றத்தின் லைசென்ஸ் பிரிவு, திடக்கழிவு
மேலாண்மைப் பிரிவு, மேம்பாட்டுப் பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவு
இயக்குநர்களும் இந்த சோதனையில் பங்கு கொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த நடவடிக்கையின் போது அந்த
சந்தையிலுள்ள வியாபார மையங்கள் மீது மட்டுமின்றி சுற்றுவட்டார
கடைகளிலும் டத்தோ பண்டார் நேரடியாக சோதனை மேற்கொண்டார்.
இச்சோதனையின் போது பல்வேறு குற்றங்களுக்காக ஒன்பது கடைகளின்
வர்த்தக லைசென்ஸ் முடக்கப்பட்டதாக நகராண்மைக் கழக உறுப்பினர்
ராமு தெரிவித்தார்.

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிளாசா ஸ்ரீ மூடாவில்
வியபாரம் செய்வோரில் 90 விழுக்காட்டினர் அந்நிய நாட்டினராக இருப்பது
உள்ளுர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்
உள்நாட்டினரின் வர்த்தக வாய்ப்புகள் பறிபோவதோடு சுற்றுச்சூழல் மற்றும்
சமூகவியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் சொன்னார்.

ஸ்ரீ மூடா வட்டாரத்தில் ஆரோக்கியமான வர்த்தக சூழலை
உருவாக்குவதற்கு ஏதுவாக இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டத்தோ பண்டார் உறுதியளித்துள்ளதாகவும் ராமு சொன்னார்.


Pengarang :