NATIONALSELANGOR

அனைத்து மாவட்டங்களிலும் மின்சுடலைகள் அமைக்கப்பட வேண்டும்- டாக்டர் குணராஜ் வலியுறுத்து

கிள்ளான், மே 3- மாநிலத்திலுள்ள அனைத்து ஒன்பது மாவட்டங்களிலும்
மின்சுடலைகளை இருப்பதை ஊராட்சி மன்றங்கள் உறுதி செய்ய
வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்
ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

இடுகாடுகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாகவும் மற்றும் இந்து
ஆகம விதிக்கேற்பவும் பெரும்பாலானோர் இறந்தவர்களின் நல்லுடல்களைத்
தகனம் செய்யவே விரும்புவதால் தகன மையங்களில் இட நெருக்கடி
ஏற்படுவதாக அவர் சொன்னார்.

கோல லங்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் மின்சுடலைகள்
இன்னும் அமைக்கப்படாத காரணத்தால் தகன காரியங்களைச் செய்வதற்கு
மற்ற மாவட்டங்களில் உள்ள மின்சுடலைகளை நாடிச் செல்ல வேண்டிய
நிர்பந்தம் இன்னும் நிலவுகிறது என்று இந்திய சமூகத்திற்கான மந்திரி
புசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் தெரிவித்தார்.

மின்சுடலைகள் இல்லாத நிலையில் தனியார் தகன மையங்களில் அதிக
செலவு செய்து பிரேதங்களைத் தகனம் செய்ய வேண்டிய நிர்பந்தம்
ஏற்படுக்கிறது. நெருங்கிய உறவுகளைப் பறிகொடுத்து மீளாத் துயரில்
இருப்பவர்களுக்கு இதனால் கூடுதல் பணச்சுமையும் ஏற்படுகிறது என்றார்
அவர்.

தற்போது கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, சிப்பாங், ஷா ஆலம், சுபாங்
ஜெயா போன்ற இடங்களில் மட்டுமே ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ்
மின்சுடலைகள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தகன மையங்களில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாகக் கோவிட்-19
நோய்த் தொற்று பரவலின் போது இறந்தவர்களைத் தகனம் செய்ய
முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டதை ஒரு படிப்பினையாகக் கொண்டு
தங்கள் பகுதிகளில் மின்சுடலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஊராட்சி மன்றங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :