SELANGOR

2,800 குழந்தைகளுக்கு RM500,000 ஒதுக்கீட்டில் சத்தான உணவுகள் வழங்கப்படும்

ஷா ஆலம், மே 3: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,800 குழந்தைகளுக்கு இந்த ஆண்டு RM500,000 ஒதுக்கீட்டில் சத்துணவுகள் வழங்கப்படும்.

அனாக் சிலாங்கூர் அனாக் செஹாட் (ASAS) திட்டத்தின் மூலம்  ஊட்டச்சத்து பால் மாவு, பிஸ்கட், தானியங்கள் மற்றும் மல்டி வைட்டமின்கள் ஆகியவை வழங்கப் படுவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“கடந்த ஆண்டு, இத்திட்டம் குழந்தைகளிடையே கால்சியத்தை அதிகரித்து எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் தொடங்கப் பட்டது. இந்நடவடிக்கை முக்கியமானது ஏனெனில் இதன் வழி குழந்தைகளிடையே ஏற்படும் வளர்ச்சி குன்றிய மற்றும் எடை குறைவு போன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும்.

“இந்த ஆண்டு, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்களால் சத்துணவு தயாரிப்பது பற்றிய தகவல்கள் வழங்கப்படும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் அனாக் சிலாங்கூர் அனாக் செஹாட் மையங்கள் நிறுவப்படும் என்றார் (மொத்தம் 56). இதன் வழி நீண்ட கால வெற்றியை உறுதி செய்ய முடியும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையைத் தவிர்க்க அனாக் சிலாங்கூர் அனாக் செஹாட் திட்டத்தின் மூலம் 10 மாதங்களுக்கு ஊட்டச்சத்து உணவு உதவியை அமிருடின் அறிவித்தார்.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) சுகாதாரக் குழுவின் கீழ் சிலாங்கூர் மக்களுக்காக வழங்கப்படும் பல்வேறு திட்டங்களில் அனாக் சிலாங்கூர் அனாக் செஹாட் திட்டமும் ஒன்றாகும்.


Pengarang :