ACTIVITIES AND ADSECONOMY

சுமையைக் குறைக்கும் மலிவு விற்பனைத் திட்டம்- மாநில அரசின் முயற்சிக்கு மக்கள் பாராட்டு

உலு கிளாங், மே 4- அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தை பொது மக்கள் பெரிதும்  வரவேற்றுள்ளனர்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைச் சமாளிப்பதற்கு இது போன்ற மலிவு விற்பனை திட்டங்களை பொது மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜாலில் அபு ஷஹாரி (வயது 34) கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக சீரடையவில்லை. நகர்ப்புற ஏழைகள் மற்றும் அதிக பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் இன்னும் தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் இத்தகைய மலிவு விற்பனைகளை நடத்துவது அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்மிக்கதாக விளங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த மலிவு விற்பனைத் திட்டம் குறித்து கருத்துரைத்த பங்சாபுரி பெரேம்பாங் இண்டா குடியிருப்பாளர் சங்கத் தலைவரான அய்னோன் அடுவான் (வயது 53) மாநில அரசின் இத்தகைய மலிவு விற்பனைகளை ஏற்பாடு செய்வதில் கூட்டு நிர்வாக மன்றம் மற்றும் சூராவ் நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பு நல்குவதாக குறிப்பிட்டார்.

இப்பகுதியில் அதிக பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் அதிகமாக உள்ளன. ஆகவே இந்த திட்டம் சீராக நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்யும் அதேவேளையில் அனைத்து குடியிருப்பாளர்களும் இதன் மூலம் பயன் பெறுவதை உறுதி செய்கிறோம் என்றார் அவர்.

உலு கிளாங், டேவான் பங்சாபுரி பெரேம்பாங் இண்டா மண்டபத்தில் நடைபெற்ற மலிவு விற்பனையின் போது அவர் இதனைச் சொன்னார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மலிவு விற்பனையில் 300க்கும் அதிகமானோர் கலந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.


Pengarang :