SELANGOR

மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மற்றும் KDEB கழிவு மேலாண்மையால் ஏற்பாடு செய்யப்பட்ட திடக்கழிவு நிர்வகிப்பு பிரச்சாரம் – 90 கிலோகிராம் மறுசுழற்சி பொருட்கள் சேகரிப்பு

ஷா ஆலம், மே 9: சிப்பாங்கிலுள்ள  தாமான் இடமான் முர்னியில் மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மற்றும் KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) ஏற்பாடு செய்த திடக்கழிவு நிர்வகிப்பு பிரச்சாரத்தின் மூலம் மொத்தம் 90 கிலோகிராம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் இயக்குனர் டாக்டர் சஸ்லிண்டா கமருசமான் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் அனைவரும் வழங்கப்பட்ட ஆறு சிறப்பு தொட்டிகளில் காகிதம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கேன்களை அப்புறப்படுத்தி அவர்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

மலேசியா புத்ரா பல்கலைக்கழக அறிவியல் வேதியியல் துறை விரிவுரையாளரின் கூற்றுப்படி, விழிப்புணர்வை வளர்ப்பதற்கும், வீடுகளில் இருந்து திடக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதை ஊக்குவிப்பதற்கும் சம்பந்தப்பட்ட தொட்டிகள் 10 மாதங்கள் முழுவதும் அவ்விடத்தில் வைக்கப்பட்டன.

“சேகரிக்கப்பட்ட பொருட்கள் KDEB கழிவு மேலாண்மையால் நிர்வகிக்கப்பட்டு மறுசுழற்சி மையத்திற்குச் கொண்டு செல்லப்படும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சிறப்புத் தொட்டிகள் இல்லாததால், பல குடியிருப்பாளர்கள் திடக்கழிவுகளை முறையாகப் பிரித்து மறுசுழற்சி செய்வதை செயல்படுத்த முடியாமல் போவதாகத் தனது ஆராய்ச்சி கண்டறிந்ததாக சஸ்லிண்டா கூறினார்.

இந்த நிலைமை தேசியப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய பொருட்களின் விரயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கழிவு மேலாண்மையின் செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அபாயத்தையும் அதிகரித்தது என்றும் அவர் விளக்கினார்.

“ஆகவே, இத்திட்டத்தின் வழி எதிர்காலத்தில் குடியிருப்பாளர்கள் மற்றவர்களுடன் மறுசுழற்சி நிர்வகிப்பு பற்றி பகிர்ந்து கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது,” என அவர் கூறினார்.

இதற்கிடையில், தாமான் இடமான் முர்னி சங்கத்தின் தலைவர் முகமட் அம்ரி அப்துல்லா, சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும் இத்திட்டத்தை அமல்படுத்திய மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மற்றும் KDEB கழிவு மேலாண்மையின் முயற்சியைப் பாராட்டினார்.

“சுகாதாரக் கவனிப்பு மக்களுக்கு நோய் அபாயத்தைக் குறைக்கும்,” என்று அவர் விளக்கினார்.


Pengarang :