NATIONAL

சீ போட்டி- 15 தங்கம், 15 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் மலேசியா

புனோம் பென், மே 10- இங்கு நடைபெற்று வரும் சீ போட்டி நேற்றுடன்
நான்காவது நாளைத் தொட்ட வேளையில் மலேசியாவின் பதக்க
வேட்டை மிகவும் மந்தமாகவே உள்ளது. நேற்றையப் போட்டிகளில் தேசிய
அணி கூடுதலாக ஐந்து தங்கப் பதக்கங்களை மட்டுமே பெற்றது.

இந்த அடைவு நிலை சற்றே முன்னேற்றகரமானதாக கருதப்பட்டாலும்
பதக்கப் பட்டியலில் 15 தங்கம், 15 வெள்ளி மற்றும் 32 வெண்கலப்
பதக்கங்களுடன் மலேசியா இன்னும் ஏழாவது இடத்தில்தான் உள்ளது.

நேற்றைய போட்டிகளில் தடகளப் பிரிவில் இரு தங்கப்பதக்கங்களும்
நீச்சல் மற்றும் ஸ்னுக்கர் போட்டிகளில் தலா ஒரு தங்கப்பதக்கமும்
மலேசியாவுக்கு கிடைத்தன.

நேற்றைய ஆட்டங்களில் முடிவில் தாய்லாந்து அணி 40 தங்கம், 30
வெள்ளி மற்றும் 45 வெண்கலப்பதக்கங்களுடன் முதலிடத்திற்கு
முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் இந்த அணி மூன்றாம் இடத்தில்
இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியட்னாம் 39 தங்கம், 39 வெள்ளி மற்றும் 46 வெண்கலப் பதக்கங்களுடன்
இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இது வரை முதல் இடத்தில் இருந்த உபசரணை நாடான கம்போடியா
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த அணி 39 தங்கம் 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்களை
இதுவரை பெற்றுள்ளது.


Pengarang :