ANTARABANGSA

வாய்த் தகராறு விபரீதத்தில் முடிந்தது- கத்தியால் குத்தப்பட்டு ஆடவர் மரணம்

மலாக்கா, மே 10- தகாத வார்த்தைகளை வெளியிட்டதன் விளைவாக தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாகி கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்கு, ஜாலான் கெனாங்காவிலுள்ள உணவு கடை ஒன்றின் அருகே நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் நிகழ்ந்தது.

சுயநினைவற்ற நிலையில் மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த 35 வயது ஆடவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாதிட் கூறினார்.

உயிரிழந்த அந்த நபர் மது போதையில் தன் சக நண்பர்களுடன் அந்த கடைக்கு உணவு அருந்தச் சென்ற போது இச் சம்பவம் நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

அந்த கடையில் இருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரின் அங்கங்களை அந்த நிர்வாகி ஆபாசமாக  வர்ணித்ததைத் தொடர்ந்து அப்பெண்ணுடன் இருந்த அவரின் மெய்க்காப்பாளர் மற்றும் காதலர் இருவரும் அவரை தட்டிக் கேட்டுள்ளார். பின்னர் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து அதிகாலை 4.15 மணியளவில் சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்த போது சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட அந்த ஆடவரை அவரின் சகாக்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் நெஞ்சுப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டது சவப் பரிசோதனை யில் தெரிய வந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்


Pengarang :