SELANGOR

சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி- பத்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு

கிள்ளான், மே 10- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்
நடைபெறும் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரப் பாடல் போட்டியின் இறுதிச்
சுற்றுக்கு பத்து பேர் தேர்வாகியுள்ளனர்.

மாநில அரசின் ஒத்துழைப்புடன் இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த
போட்டிக்கு சிலாங்கூர் தமிழ் கலைஞர் இயக்கம் ஏற்பாட்டு ஆதரவை
வழங்கியுள்ளது.

இந்த போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு 22 போட்டியாளர்கள்
தேர்வாகியிருந்த நிலையில் அவர்களில் இறுதிச் சுற்றுக்கு தகுதி
பெறுவோரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி கடந்த ஞாயிறன்று
இங்குள்ள தெங்கு கிளானா இ-லைப்பரியில் நடைபெற்றது.

இந்த போட்டியின் நடுவர்களாக டி.எம்.எஸ். சிவகுரு, அல்லிமலர், டாக்டர்
ரவிசந்திரிகா சுப்பையா ஆகியோர் பணியாற்றினர். இறுதிச் சுற்றுக்குத்
தேர்வாகியுள்ள பத்து போட்டியாளர்களுக்கும் பயற்சியளிப்பதற்கு பத்து
கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்
குணராஜ் ஜோர்ஜ், இளம் தலைமுறையினர் மத்தியில் மறைந்திருக்கும்
கலைத்திறனை வெளிக்கொணரும் நோக்கில் இந்த போட்டிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கலை சார்ந்த துறைகளில் ஈடுபடுவதன் மூலம் தீயவழிகளில்
செல்வதிலிருந்து விலகியிருப்பதற்கான சூழலை இத்தகைய போட்டிகள்
இளம் பிராயத்தினருக்கு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கைத்
தெரிவித்தார்.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், டேவான் ஹம்சாவில் நடைபெறும் என்றும் அவர் சொன்னார். இந்நிகழ்வில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் நம்பிக்கை கூட்டணியின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொள்வர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :