NATIONAL

இரு மகள்களைப் பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 36 ஆண்டுச் சிறை, 20 பிரம்படி

புத்ராஜெயா, மே 10- வயது குறைந்த தன் இரு மகள்களை பாலியல்
வன்புணர்வு செய்த குற்றத்திற்காக முன்னாள் கிரேன் ஓட்டுநர் ஒருவருக்கு
இங்குள்ள மேல் முறையீடு நீதிமன்றம் 36 ஆண்டுச் சிறைத்தண்டனையும்
20 பிரம்படியும் விதித்தது.

தனக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைக் குறைக்கக் கோரி
அந்த ஆடவர் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை டத்தோஸ்ரீ
கமாலுடின் முகமது சைட், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ
லிம் சோங் ஃபோங் ஆகியோரடங்கிய நீதிபதி குழு ஏற்றுக் கொண்டு இந்த
தீர்ப்பை வழங்கியது.

அந்த ஆடவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் விதிக்கப்பட்டிருந்த
சிறைத் தண்டனையை தலா 18ஆண்டுகளாவும் பிரம்படியைத் தலா 10
ஆகவும் குறைப்பதாக விசாரணைக்குத் தலைமையேற்ற நீதிபதி கமாலுடின்
தனது தீர்ப்பில் கூறினார்.

தனக்கு எதிரான இரு கற்பழிப்புக் குற்றச்சாட்டுகளையும் அந்த 42 வயது
ஆடவர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 40 ஆண்டுச்
சிறைத் தண்டனை மற்றும் 24 பிரம்படிகளை ஜொகூர் மாநிலத்தின் சிகமாட்
செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2020 மே மாதம் வழங்கியது.

தனக்கு எதிரான தண்டனையைக் குறைக்கக் கோரி செய்த
விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவ்வாடவர்
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

பதினைந்து வயதான தனது மகளைக் கடந்த 2017ஆம் ஆண்டு மத்தியிலும்
13 வயதான மகளைக் கடந்த 2020 ஜனவரி மாதத்திலும் பாலியல்
வன்புணர்வு செய்ததாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :