NATIONAL

மியன்மார் நெருக்கடியைச் சமாளிக்க ஆசியான் நாடுகள் ஒன்றுபட வேண்டும்- இந்தோ. அதிபர் வலியுறுத்து

லபுவான் பாஜோ, மே 11- ஈராண்டுகளுக்கு முன்னர் ஆசியானுடன்
இணக்கம் காணப்பட்ட அமைதித் திட்டத்தை அமலாக்கம் செய்வதில்
மியன்மார் நாட்டின் ஆளும் இராணுவ அரசாங்கம் எந்த முயற்சியும்
செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அதிகரித்து வரும் நெருக்கடியைச்
சமாளிப்பதற்கு ஆசியான் நாடுகள் தங்கள் ஒற்றுமையைப் புலப்படுத்த
வேண்டும் என்று இந்தோனேசிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகள் அமைப்பான ஆசியானின் கூட்டத்திற்குத்
தலைமையேற்றுள்ள ஜோக்கே விடோடோ, லபுவான் பாஜோவில்
நடைபெறும் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று இந்த
கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த ஆசியான் கூட்டத்தில் ஐந்து அம்ச கருத்திணக்கம் முக்கிய
விவாதத்தின் பிரதானக் கருப்பொருளாக விளங்குகிறது.

அந்த ஐந்து அம்ச கருத்திணக்கம் குறித்து நான் வெளிப்படையாகப் பேச
வேண்டியுள்ளது. அந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
எதுவும் ஏற்படவில்லை. ஆகவே, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து
ஆலோசிப்பதற்கு ஆசியான் நாடுகளிடையே ஒற்றுமை அவசியமாகிறது
என்றார் அவர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இராணுவப் புரட்சிக்குப் பின்னர்
மியன்மாரில் அதிகரித்து வரும் வன்செயலைக் கட்டுப்படுத்துவதற்கான
திட்டங்களை அந்த பத்து நாடுகளைக் கொண்ட அமைப்பு வகுக்க
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்நாட்டில் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பு வலுத்து வரும் வேளையில்
சிறுபான்மை இனக் கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக
அந்நாட்டு இராணுவம் பல முனைகளில் தாக்குதல்களை நடத்தி
வருகிறது.


Pengarang :