NATIONAL

சீ போட்டியில் இளம் விளையாட்டாளர்களின் அடைவுநிலை குறித்து ஹன்னா இயோ மனநிறைவு

கோலாலம்பூர், மே 11- கம்போடியாவில் நடைபெறும் தென்கிழக்காசிய
நாடுகள் போட்டி விளையாட்டில் (சீ போட்டி) நாட்டின் இளம்
விளையாட்டாளர்கள் வெளிப்படுத்திய ஆட்டத் திறன் குறித்து தாம்
மனநிறைவு கொள்வதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டியில் முதன்
முறையாகப் பங்கேற்ற போதிலும் அவர்கள் நாட்டிற்கு தங்கப் பதக்கத்தைப்
பெற்றுத் தந்துள்ளதாக அவர் சொன்னார்.

சில போட்டிகளில் ஏற்கனவே கணித்த அளவுக்குத் தங்கப் பதக்கங்களைப்
பெற முடியாத போதிலும் சீலாட், வூஷூ, கராத்தே, கோல்ப் போன்ற
போட்டிகளில் எதிர்பாராத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி
நிர்ணயித்த இலக்குக்கும் அதிகமாகத் தங்கப் பதக்கங்களைப் போட்டியாளர்கள்
பெற்றுத் தந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரை சீலாட், கராத்தே, வூஷூ, கோல்ப் மற்றும் இதரப் பல
போட்டிகளில் நமது ஆட்டக்காரர்கள் தனிநிகரற்ற சாதனைகளைப்
புரிந்துள்ளனர். இளம் விளையாட்டாளர்களும் பல அற்புதங்களை இங்கு
நிகழ்த்தியுள்ளனர் என்றார் அவர்.

விளையாட்டின் இயல்புத் தன்மையே இதுதான். அது போட்டி நிறைந்த
ஒரு களம். சில நேரங்களில் நாம் வெற்றி பெறலாம். சில நேரங்களில்
நோம் தோல்வியுறலாம். தோல்வி கண்டால் அதற்கான காரணத்தைக்
கண்டறிந்தால் எதிர்காலத்தில் தோல்விக்கான சாத்தியத்தைக்
குறைக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டின் மேம்பாடும் அடைவு நிலையும் தொடர்வதற்கு ஏதுவாக
சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்வதற்காகச் சீ போட்டியில் சிறப்பான அடைவு நிலையை வெளிப்படுத்திய ஆட்டக்காரர்களைப் பட்டியலிடும் பணியில் அமைச்சு ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :