NATIONAL

கடைகளை அந்நிய நாட்டினருக்கு வாடகைக்கு விடும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை- வணிகர்களுக்கு எம்.பி.கே. எச்சரிக்கை

ஷா ஆலம், மே 11- கிள்ளான், ஜாலான் மேரு, பெரிய மார்க்கெட்டில்
வணிகம் செய்வோரும் லைசென்ஸ் வைத்திருப்போரும் உள்நாட்டினராக
உள்ள வேளையில் அந்நிய நாட்டினர் வெறும் உதவியாளர்களாக மட்டுமே
பணி புரிவது கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில்
தெரிய வந்துள்ளது.

உள்நாட்டினர் மட்டுமே வர்த்தக லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பம்
செய்ய முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில்
அந்நிய நாட்டினரின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத்
தமது தரப்பு கடுமையாகக் கருதுவதாக நகராண்மைக் கழகத்தின் சந்தை
மற்றும் அங்காடி வணிகப் பிரிவு இயக்குநர் அஸார் சம்சுடின் கூறினார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட கடைகளை அந்நிய நாட்டினருக்கு வாடகைக்கு
விடும் தரப்பினரின் வர்த்தக லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்பதோடு
கடைக்கும் சீல் வைக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

இந்த மார்க்கெட்டில் அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்யாமலிருப்பதை
உறுதி செய்ய சந்தை மற்றும் அங்காடி வணிகப் பிரிவு தொடர்ச்சியான
சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் எனக் கூறிய அவர்,
அந்நிய நாட்டினருக்குக் கடைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் குறுக்கு
வழியில் லாபம் சம்பாதிக்க முயலும் தரப்பினருக்கு எதிராக கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Pengarang :