ANTARABANGSA

விரைவில் பணக்காரராகும் திட்டத்தில் 2,000 பேரை ஏமாற்றிய தம்பதிக்கு 20 ஆண்டுச் சிறை

பேங்காக், மே 11- விரைவில் பணக்காரராகும் திட்டத்தின் மூலம்
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கான டாலரை
ஏமாற்றிய தம்பதியருக்கு தாய்லாந்து நீதிமன்றம் 12,640 ஆண்டுச்
சிறைத்தண்டனை விதித்தது.

எனினும், கடந்த 2019ஆம் ஆண்டில் புரியப்பட்ட இக்குற்றங்களை வன்தானீ
திப்பாவேத் மற்றும் அவரின் கணவரான மேதி சின்பா ஆகியோரும் ஒப்புக்
கொண்ட காரணத்தால் தண்டனை காலத்தை 5,056 ஆண்டுகளாக
அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் குறைந்தது.

இருந்த போதிலும் குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை
அந்நாட்டு சட்டம் 20 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தியுள்ளதால்
அவ்விருவரும் இருபது ஆண்டுகள் வரை மட்டுமே சிறையில்
இருப்பார்கள் என தி பேங்காக் போஸ்ட் பத்திரிகை கூறியது.

93 விழுக்காடு வரை வருமானம் ஈட்டித் தரும் சேமிப்புத் திட்டத்தில்
முதலீடு செய்யும்படி கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர்
வரையிலான காலக்கட்டத்தில் பேஸ்புக் வாயிலாக பொது மக்களுக்கு
அழைப்பு விடுத்ததாக அத்தம்பதியரோடு மேலும் எழுவர் மீது
குற்றஞ்சாட்ட்டப்பட்டிருந்தது.

இத்திட்டம் மீது பொதுமக்கள் நம்பிக்கை கொள்வதற்காக வான்தானீ
தன்னிடம் உள்ள நகைகளை காணொளி வாயிலாக மக்களுக்கு
விளம்பரப்படுத்தி வந்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தில் மக்களை முதலீடு செய்ய வைப்பதற்காகத் தங்களின்
ஆடம்பர வாழ்க்கையை அத்தம்பதியர் மற்றவர்களிடம் பறைசாற்றி
வந்துள்ளனர் என்று போலீசார் கூறினர்.

அத்தம்பதியரை நம்பி பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளையும்
வீட்டையும் இழந்துள்ளதோடு சொத்துகளை இழந்த காரணத்தால் பலர்
தற்கொலைக்கும் முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.


Pengarang :